அடுத்தக்கட்ட தேர்தலுக்காக மோடி இஸ்லாமியர்கள் குறித்து இன்னும் மோசமாக பேசுவார் - திருநாவுக்கரசர்
நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி அடுத்தக்கட்ட தேர்தல்களுக்காக இஸ்லாமியர்கள் குறித்து இன்னும் மோசமாக பேச வாய்ப்பு உள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ வகைகள், சர்பத், நீர்மோர் உள்ளிட்டவைகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மறைவு அதிர்ச்சியையும், வேதனையும் தரக்கூடியது. அவர் உடல் எரிக்கப்பட்ட விதத்தை வைத்து சந்தேகத்திற்கு உரிய மரணம் என்று கூறி வருகின்றனர். இது போல் சம்பவம் யாருக்கு நடந்தாலும் கண்டனத்திற்கு உரியது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
உரிய விசாரணைக்கு பின் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஏதும் சொல்ல முடியாது. இந்த வழக்கை ராமஜெயம் கொலை வழக்கை போல் கிடப்பில் போட்டு விடாமல் காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.
கர்நாடகாவில் தேவகவுடா மகன் மற்றும் பேரன் ஆகியோர் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு மற்றும் கைது சம்பவம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை மிகவும் தலைகுனிய வைத்துள்ளது. இதனை நிரூபித்து குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். எந்த கட்சியையும், யாரும் அழித்துவிட முடியாது. தற்போது ஆட்சியில் இல்லாததால் அதிமுகவை அழிக்க யாராலயும் முடியாது. அதே போன்று காங்கிரஸ் தற்பொழுது ஆட்சியில் இல்லை காங்கிரஸ் அழிந்தா போய்விட்டது.
டெல்லியில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பே இல்லை; திருமாவின் பேச்சால் திடீர் சலசலப்பு
பிரதமர் மோடி தன்னுடைய பிரதமர் பதவியை மறந்துவிட்டு தரம் தாழ்ந்து பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். தேர்தல் முடிவு என்ன என்பதை அவர் அறிந்து விட்டார். அடுத்த கட்ட தேர்தலிலும் இன்னும் மோசமாக இஸ்லாமியரைப் பற்றி பிரதமர் பேசக்கூடிய சூழ்நிலை ஏற்படும். நான் திருச்சி தொகுதியில் 4.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கடந்த முறை வெற்றி பெற்றேன். தினசரி நாளிதழ் எடுத்த சர்வேயில் 39 எம்பிக்களில் சிறந்த எம்பியாக செயல்பட்டதாக எனக்கு முதலிடம் கொடுத்தார்கள்.
அப்படிப்பட்ட சூழலில் எனக்கு சீட் கொடுக்காகது வருத்தமாகத்தான் உள்ளது. எனக்கு மட்டுமள்ள கூட்டணி கட்சியினரும் அதிமுக உள்ளிட்ட கட்சியினரும் வருத்தப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூட எனக்கு சீட் கிடைக்காததால் வருத்தப்பட்டு பேசியதாக சொன்னார்கள். சொந்த மாவட்டம் என்பதால் அவர் பேசி இருபார். அதிமுக எங்களுக்கு எதிர் கட்சி தான். எதிரி கட்சி அல்ல. அந்த வகையில் எனக்காக கட்சி பாகுபாடு இன்றி பலரும் வருத்தப்பட்டார்கள். எனக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் என்றார்.