திமுக பிரமுகருக்கு சொந்தமான நிஜாம் பாக்கு தொழிற்சாலைக்கு சீல்... அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் செயல்படும் திமுக பிரமுகருக்கு சொந்தமான நிஜாம் பாக்கு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் செயல்படும் திமுக பிரமுகருக்கு சொந்தமான நிஜாம் பாக்கு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு பரவல் தடுப்புக்காக நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய் பரவாமல் இருக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெளியே சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் உள்ளதால் எந்த தொழிற்சாலைகளையும் திறக்கக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் இராஜகோபாலபுரத்தில் பிரபலமான நிஜாம் பாக்கு நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் புதுக்கோட்டை மேட்டுபட்டி, மாலையீடு உள்ளிட்ட இடங்களில் உள்ளது. இதன் உரிமையாளர் புதுக்கோட்டை நிஜாம் காலனியை சேர்ந்த சபியுல்லா. தி.மு.க பிரமுகர். இங்கு நிஜாம் பாக்கு தவிர பேப்பர் கப், செயற்கை வாழை இலை தயாரிப்பு உட்பட, பல்வேறு தொழில்கள் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஊரடங்கை மீறி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் செயல்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி அதிகபடியான ஊழியர்கள் இருந்ததையடுத்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நிறுவனம் நடத்த அனுமதி பெற்று உள்ளதாக கூறியுள்ளனர். இருப்பினும் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக ஊழியர்களை வைத்து நிறுவனத்தை நடத்தியதால் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் அவர்கள் பெற்ற அனுமதியை ஆய்வு செய்ய வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.