மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும்; புதுக்கோட்டையில் 500க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நாடு நலம்பெறவும் ஆலங்குடி ஈ த் கா மைதானத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு கோடைகாலத்திற்கு முன்னரே வெயில் கொளுத்தியது. தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், அதிக வெப்ப பகுதியாக அறிவிக்கப்பட்டு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் வெப்பம் 100 டிகிரி வரை பதிவாகிவருகின்றது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அங்கு நீர்நிலைகள், குளம், குட்டைகள், அணைகளின் தண்ணீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், மழை வேண்டியும், நீர்நிலைகளில் தண்ணீர் நிறையவும், நாடு வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நலம்பெற வேண்டியும், மக்கள் நலம் பெற வேண்டியும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ராஜா முகமது, முகமது சருக் ஜமாத்தார்கள் முன்னிலையில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி ஆலங்குடி முக்கிய வீதி வழியாக சென்று ஈ த் கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.