டீ பந்தலாக மாறிய அதிமுகவின் தண்ணீர் பந்தல்: புதுக்கோட்டையில் ருசிகரம்!
அதிமுக சார்பில் தொடங்கப்பட்ட கோடைகால தண்ணீர் பந்தல், புதுக்கோட்டையில் சாரல் மழை பெய்து வருவதால் சம்சா, பிரட், பன், டீ பந்தலாக மாறியுள்ளது
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் அறிவுரைப்படி, அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகரில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல் மட்டுமல்லாது புதுக்கோட்டை திலகர் திடலில் குளு குளு ஐஸ் கிரீம் பந்தலும் தொடங்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் தினந்தோறும் தர்பூசணி பழம், நீர்மோர், சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் ஆகியவை அதிமுக சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஐஸ்கிரீம் பந்தலில் தினந்தோறும் விதவிதமான ஐஸ்கிரீம்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை முதல் புதுக்கோட்டையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு காளை சிலை அருகே அதிமுக இளைஞரணி சார்பில் திறக்கப்பட்டுள்ள கோடைகால தண்ணீர் நீர்மோர் பந்தலில் வழங்கப்படும் தர்பூசணி நீர்மோர் குளிர்பானங்கள் ஆகியவை வழங்குவது நிறுத்தப்பட்டு, மழைக்கு இதமாக பொதுமக்களுக்கு சம்சா, வடை, பன், பிரட் மட்டுமல்லாமல் ஏலக்காய் தேனீர் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் குளிருக்கு இதமாக நீண்ட வரிசையில் நின்று சம்சா பன் பிரட் டீ ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டதோடு தேநீர் அருந்தி சென்றனர். அதிமுகவினரின் இந்த புதிய முயற்சி பொதுமக்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.