கணவருடன் செல்போனில் மொட்டை மாடியில் நடந்து கொண்டே பேசிக்கொண்டே இருந்து இளம்பெண் ஒருவர் திடீரென கால் தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது மனைவியான செல்வி என்ற அந்தப் பெண்ணுக்கு 8 மாத குழந்தை உள்ள நிலையில், புதுச்சேரியிலுள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், வெளியூரில் பணிபுரிந்து வரும் சரவணனுடன் 17-ம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது, எதிர்பாராத விதமாக செல்வி கால் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மொட்டை மாடியின் சுற்றுச்சுவர் குறைவான உயரத்தில் இருந்ததால் செல்வி தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.