பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மீது இடி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி அலமேலு (வயது 37). இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். இவரது கணவர் பூமாலை இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனாவில் இறந்த நிலையில் தனது இரு மகன்களான அசோக், ஆகாஷ் என்பவர்களுடன் வசித்து வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தநிலையில் இவர் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் அதே அருமடல் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்குச் சொந்தமான வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்பகுதியில் மழை பெய்ய தொடங்கியதால் அருகில் இருந்த புளியமரத்திற்கு அடியில் நின்றுள்ளார் அலமேலு, 

அப்போது எதிர்பாரத விதமாக அலமேலு நின்று கொண்டிருந்த புளியமரத்தின் மீது இடி தாக்கியுள்ளது. இடி தாக்கியத்தில் அலமேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இடி விழுந்த அதிர்வில் அருகில் நின்று கொண்டிருந்த அன்பழகன் என்பவரும் காலில் லேசான காயமடைந்தார். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் ஊர் மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

இதனைத் தொடர்ந்து மருவத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த காவல் துறையினர் அலமேலுவின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த அன்பழகன் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இடி விழுந்து அலமேலு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.