தமிழகத்தில் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 2 ம் தேதி தொடங்கியது. அன்று இரவு முழுவதும் நீடித்த வாக்கு எண்ணிக்கை நேற்று பிற்பகல் வரை தொடர்ந்தது.

இந்தநிலையில் பெரம்பலூரில் உள்ளாட்சித்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குசீட்டுகள் சாலையோரம் சிதறி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வாக்காளர்கள் முத்திரை மற்றும் அதிகாரிகளின் கையெழுத்துடன் 100 க்கும் மேற்பட்ட வாக்குசீட்டுகள் சிதறிக்கிடந்தன. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த காவலர்கள் வட்டாச்சியர் அலுவலக அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சாலையில் கிடந்த வாக்குசீட்டுகளை போலீசார் கைப்பற்றினர். அதில் ஏணி சின்னம், உருளை சின்னம், ஆட்டோ சின்னம் மற்றும் பூட்டு சின்னம் அச்சிடப்பட்டிருந்தது.. அவை அனைத்தும் கவுன்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலுக்கான வாக்குசீட்டுகள் என்று கூறப்படுகிறது. மொத்தம் 113 வாக்குசீட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக கொட்டப்பட்டதா அல்லது அதன் பிறகு வீசப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக வேட்பாளர்கள் பயன்படுத்திய மாதிரி வாக்குசீட்டுகளாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.