பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் செங்குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிற்றம்பலம். இவரது மகன் அஜித்குமார். வயது 24. இவர் ஒரு டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அதே ஊரை சேர்ந்தவர் அன்பு குமார். வயது 25. பூக்கடை வைத்து தொழில் பார்த்து வந்துள்ளார். இவரது நண்பர் அருள்குமார்(21). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் செங்குன்னத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தங்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெரம்பலூரில் ஒரு வேலைக்காக சென்றிந்த அஜித்குமார், மீண்டும் செங்குன்னம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளார். சென்னை-திருச்சி நான்கு வழி சாலை அருகே வந்த போது அன்புகுமார் வந்த மோட்டார் சைக்கிளும் அஜித்குமாரின் இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அஜீத்குமார் மற்றும் அன்புகுமார் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாயினர். படுகாயங்களுடன் அருள்குமார் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த அஜித்குமார் மற்றும் அன்புகுமாரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.