மோடி, அமித்ஷாவை தாறுமாறாக விமர்சித்த தமமுக நிர்வாகி.. கொலை மிரட்டல் வழக்கில் சிறையில் அடைப்பு!!
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சித்து பேசிய தமமுக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியை சேர்ந்தவர் முஹம்மது ஷெரிப். பட்டதாரி இளைஞரான இவர் திருச்சி மாவட்ட தமமுக மாணவரணி செயலாளராக இருந்து வருகிறார். அந்த கட்சி சார்பாக நடக்கும் கூட்டங்களில் பங்கு பெற்று பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடியில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக தெருமுனை கூட்டம் நடந்திருக்கிறது. இதில் பங்கு பெற்று முஹம்மது ஷெரிப் பேசி இருக்கிறார். அப்போது காஷ்மீர் விவகாரம், முத்தலாக் மசோதா போன்றவற்றில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பேசிய அவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
இதுகுறித்து மங்களமேடுவை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட காவல் துறையினர் முஹம்மது ஷெரிப் மீது கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுதல், அனுமதியின்றி கூட்டம் நடத்துதல், இறையாண்மைக்கு எதிராக பேசுதல் என ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறை அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.