பெரம்பலூர் மாவட்டம் கூத்தனூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். விவசாயியான இவருக்கு சொந்தமாக நிலங்கள் இருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 8000 ஹெக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. முத்துகிருஷ்ணனும் தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட முடிவு செய்தார் .இதற்காக 1500 கிலோ விதை வெங்காயங்களை வாங்கி தனது தோட்டத்தில் வைத்திருந்தார்.

நேற்று காலையில் வழக்கம் போல தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாதுகாத்து வைத்திருந்த விதை வெங்காய மூட்டைகளில் ஆறு மூட்டைகள் திருடு போயிருந்தன. அவற்றில் 350 கிலோ வெங்காயம் இருந்திருக்கிறது. இதுதொடர்பாக பாடாலூர் காவல்நிலையத்தில் முத்துகிருஷ்ணன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்களை எப்போதும் காட்டுக்கொட்டகையில் வைப்பது தான் அப்பகுதி விவசாயிகளின் வழக்கம். இந்தநிலையில் சாகுபடிக்காக வைக்கப்பட்டிருந்த விதை வெங்காயங்கள் கிலோ கணக்கில் திருடு போயிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இச்சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.