நீலகிரி மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக தினமும் அடர்ந்த காட்டில் 15 கிமீ நடந்தே சென்று தபால்களை வழங்கிவந்த தபால்காரர் டி.சிவன் ஓய்வுபெற்ற நிலையில், அவரை ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் வெகுவாக பாராட்டியுள்ளார். 

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த தபால்காரர் டி.சிவன், அவரது அர்ப்பணிப்பான சேவைக்காக பாராட்டு மழையில் நனைந்துவருகிறார். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். சேவைத்துறையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர், சம்பளத்திற்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் தான் பார்க்கின்றனரே தவிர, அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் மக்களுக்காக பணியாற்றுபவர்கள் சிலரே. 

அப்படிப்பட்ட அரசு ஊழியர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிப்பார்கள். அப்படி மக்கள் மனதில் இடம்பிடித்ததுடன் மட்டுமல்லாமல் அரசு உயரதிகாரிகள், மக்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரின் பாராட்டு மழையில் நனைபவர் தான் தபால்காரர் டி.சிவன்.

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த டி.சிவன் என்பவர் 30 ஆண்டுகளாக அங்கு தபால்காரராக பணியாற்றிய அவர் கடந்த வாரம் ஓய்வுபெற்றுள்ளார். அவர் குன்னூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மற்ற பகுதிகளுக்கும் அடர்ந்த காட்டில் 15 கிமீ தினமும் நடந்தேசென்று தபால்களை வழங்கியுள்ளார். தபால்களை மக்களுக்கு வழங்குவதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தபால்காரர் பணியை ரசித்து மகிழ்ந்து செய்துள்ளார் டி.சிவன். 

தனது பணி குறித்து பேசிய தபால்காரர் சிவன், கீழ்சிங்காரா என்ற பகுதி அடர்ந்த காடு. அந்த வழியில்தான் போயாக வேண்டும். அந்த வழியில் போகும் போது என்னை காட்டு யானைகள் விரட்டியிருக்கின்றன. அதிலிருந்து தப்பி செல்வதற்கான வழிகளை அமைத்துக்கொண்டு அந்த மக்களுக்கு போய் சேர வேண்டிய தபாலை நான் கொடுத்திருக்கிறேன். கரடி, பாம்பு என அனைத்தையும் அந்த வழியில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை அவற்றின் வேலையை செய்தன. நான் தபால் வழங்கும் எனது பணியை செய்தேன் என்று கூறுகிறார் தபால்காரர் சிவன்.

வடகலைதோட்டம், மேல்குறும்பாடி உள்ளிட்ட ஆதிவாசிகள் வசிக்கும் கிராமங்களில் போய் தபாலை கொடுத்துவிட்டு அங்கிருந்து பஸ் மூலம் குன்னூருக்கு வந்துவிடுவேன். காலையில் 10 மணிக்கு தொடங்கினால் ஆதிவாசி கிராமங்களில் கடிதம் கொடுக்க 2 மணி ஆகும். எனது கடமையை நான் செய்தேன். நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நாம் சரியாக செய்ய வேண்டும் என்றார். 

அவரது அர்ப்பணிப்புக்கும், பொறுப்புணர்வுக்கும் இப்போது பலன் கிடைத்துள்ளது. அவரை ஐஏஎஸ் அதிகாரி முதல் சாமானியர்கள் வரை அனைவரும் பாராட்டுவதுடன், மகிழ்வுடன் நினைவுகூறுகின்றனர்.

டி.சிவன் குறித்து ஐஏஎஸ் சுப்ரியா தனது டுவிட்டர் பக்கத்தில், குன்னூரில் அணுகமுடியாத பகுதிகளுக்கு தபால்களை வழங்க டி.சிவன் காடுகள் வழியாக தினமும் 15 கிமீ பயணித்தார். காட்டு யானைகள், கரடிகள், வழுகும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றை கடந்து, 30 ஆண்டுகலாக தனது பணியை அர்ப்பணிப்புடன் செய்தவர் சிவன். கடந்த வாரம் ஓய்வு பெற்றுள்ளார் என்று டி.சிவனை பாராட்டி ஐஏஎஸ் சுப்ரியா பதிவிட்டிருந்தார். 

ஓய்வுபெற்ற தபால்காரர் டி.சிவனுக்கு பல தரப்பினரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகரும் டி.சிவனின் சேவையை பாராட்டியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராஜீவ் சந்திரசேகர், அர்ப்பணிப்புக்கும் பொறுப்புணர்வுக்கும் மிகச்சிறந்த முன்னுதாரணம் இவர். அரசு சேவை என்றால் என்னவென்பதை உணர்த்தியுள்ளார் என்று தபால்காரர் டி.சிவனை பாராட்டியுள்ளார் ராஜீவ் சந்திரசேகர்.