நீலகிரியில் ஒரு பெண்ணால் 200 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை அருகே தங்காடு ஒரநள்ளி என்ற கிராமத்தில் 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதில், நூற்றுக்கணக்காக படுகர் இன மக்கள் கலந்து கொண்டனர். கோவையிலிருந்து வந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கலந்து கொண்டார். காய்ச்சலோடு வந்த அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் தனக்கு சோதனை செய்ததை மறைத்து திருமணம் மற்றும் முள்ளிக்கூர் துக்க நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.

பரிசோதனை முடிவில் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் அவசர அவசரமாக அப்பெண்ணின் தொடர்புகளை தேடிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர். இதில், திருமணத்தில் கலந்துகொண்ட 190 பேருக்கு கொரோனா தொற்று பரவியது உறுதியானது. இதையடுத்து தங்காடு ஒரநள்ளி கிராமமே அச்சத்தில் உறைந்துள்ளது. இந்நிலையில், கொரோனாவை பரப்பிய பெண் உட்பட 2 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். திருமணம் மற்றும் துக்க நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் 8 கிராமங்களுக்கு சென்றதால் அங்கும் கொரோனா பரவி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.