மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை..! அதிரடி உத்தரவு
ஊட்டியில் மாஸ்க் அணியாவிட்டால், 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முழுதும் ஒரு கோடியே 47 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக மூன்றாமிடத்தில் உள்ளது.
இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு இரண்டாமிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மேலும் 4985 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 1,71,698ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் கடந்த 10 நாட்களாக சென்னையில் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கொரோனா வரும் முன் காப்பதே சிறந்தது என்பதால், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி ஆகியவை வலியுறுத்தப்பட்டுவருகிறது.
ஊரடங்கு காலத்தில் சரியான காரணமில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகின்றன. மக்களுக்கு மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், இன்னும் பலர் அலட்சியமாக இருப்பதை பார்க்கமுடிகிறது.
அந்தவகையில், ஊட்டியில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால், 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று புதிதாக 27 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 513ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.