#BREAKING கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்.. வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பணியிட மாற்றம்..!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ல் காவலாளி கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் திடீரென இந்த வழக்கை விசாரணை செய்துவரும் டி.எஸ்.பி சுரேஷ் என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ல் காவலாளி கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ்சாமி, மனோஜ் சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீடிக்கும் மர்மம்
இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், கொள்ளை சம்பவம் நடந்த சில நாட்களில் சேலத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். மேலும் கேரளாவில் நடந்த விபத்தில் சயான் மனைவி மற்றும் குழந்தையும் இறந்தனர். கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டாக பணிபுரிந்த தினேசும் தற்கொலை செய்து கொண்டார். சினிமா படத்தை மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை இந்த வழக்கில் மர்மம் நீடித்து வருகிறது.
5 தனிப்படைகள் அமைப்பு
நீலகிரி மாவட்ட டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொடநாடு வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது. இந்த தனிப்படையில் 2 டிஎஸ்பிக்கள் ஒரு ஆய்வாளர் இடம் பெற்றிருந்தார். குறிப்பாக சந்திரசேகர் டிஎஸ்பி, சுரேஷ் டிஎஸ்.பி., வேல்முருகன் உதவி ஆய்வாளர் 4 பேர் கொண்ட தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.
டிஎஸ்பி இடமாற்றம்
தனிப்படையினர் சயான், கொடநாடு எஸ்டேட் மேலாளர், குற்றவாளிகள் தப்பி சென்ற காரின் உரிமையாளர் என 200க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடத்தியுள்னர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் அனுபவர் ரவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம் சென்னையில் வைத்து ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கொடநாடு வழக்கில் தனிப்படையில் இடம்பெற்றிருந்த சுரேஷ் குன்னூர் டிஎஸ்பியாக இருந்து வந்த நிலையில் திடீரென பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சந்திரசேகரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் தனிப்படையில் உள்ள டிஎஸ்பி மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.