காலில் காயத்தோடு ஊருக்குள் புகுந்த புலி..! அச்சத்தில் கிராம மக்கள்..!
நீலகிரி அருகே காலில் அடிபட்ட நிலையில் புலி ஒன்று ஊருக்குள் சுற்றி வருவதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தைச் சுற்றி மலைகள் நிறைந்துள்ளன. இங்கு ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இங்கிருக்கும் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் பாட்டவயல் கிராமம் அமைந்திருக்கிறது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியிருக்கும் இங்கு புலி ஒன்று நடமாடுவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு செல்லும் சாலையில் அந்த புலி சுற்றித்திரிவதாக பார்த்தவர்கள் கூறுகின்றனர். அதை சிலர் செல்போனில் படம்பிடித்திருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக புலியின் நடமாட்டம் இருப்பதாகவும் அதன் காலில் பலமாக அடிபட்டிருப்பது போல தெரிவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
காலில் காயம்பட்டிருப்பதால் புலி நொண்டி நடப்பதாகவும் அதனால் வனப்பகுதியில் இருந்து வெளி வந்திருக்கலாம் என்று தெரிகிறது. பொதுமக்கள் வாழும் பகுதியில் புலி சுற்றித்திரிவதால் கிராமவாசிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே புலியை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதன் காலில் காயம்பட்டிருப்பதால் சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.