VIDEO | காரமடை அருகே பேருந்தை வழிமறித்த யானைகூட்டம்! அரை மணிநேரம் கழித்து வழிவிட்டதால் பயணிகள் நிம்மதி!
மேட்டுப்பாளையம் அருகே காரமடை மஞ்சூர் சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த 5 காட்டுயானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு 3வது வழிப்பாதையாக வெள்ளியங்காடு-மஞ்சூர் பாதை உள்ளது. இந்த பாதை வழியாக மஞ்சூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதுதவிர நீலகிரிக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த சாலையிலும் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும்.
இந்த சாலையானது அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளதால் அடிக்கடி சாலைகளில் காட்டு யானை, காட்டு பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் வெள்ளியங்காடு அருகே வந்தபோது வனத்தைவிட்டு வெளியேறிய 5 காட்டு யானைகள் நடுரோட்டிற்கு வந்தன.
அங்கு வந்ததும், அரசு பஸ்சை காட்டு யானைகள் கூட்டம் வழிமறித்து நின்றது. யானைகள் கூட்டத்தை பார்த்ததும் பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டார். மேலும் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். ஆனால் யானைகள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி சத்தமிட தொடங்கினர்.
பஸ் டிரைவரும், பயணிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்த போது, சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் கூட்டம் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து பஸ் டிரைவரும், பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதன் பின்னர் பஸ்சை பஸ் டிரைவர் வேகமாக இயக்கி சென்றார். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
ஊட்டி போல் குளு குளுவென மாறிய சென்னை..! திடீரென மாறிய வானிலைக்கு காரணம் என்ன.?