ஊட்டி அருகே தொழிற்சாலை அதிகாரி ஒருவரால் 100 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், எல்லநள்ளி பகுதியில், தனியார் ஊசி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 785 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு ஜூன் 16ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 22 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, கடந்த மாதம், ஜூன் 12ம் தேதி வரை தினமும் தொழிற்சாலைக்கு வந்து சென்றுள்ளார். இதனையடுத்து, காய்ச்சல் காரணமாக  ஜூன் 13,14,15 ஆகிய தேதிகளில் வீட்டில்  ஓய்வெடுத்துள்ளார். பின்னர், 16ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இருந்த கொரோனா தொற்று காரணமாக அப்பகுதியில் உள்ள  20க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் 100 பேருக்கு, தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்;-'நீலகிரியில் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில், எல்லநள்ளி தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவரால் மட்டும், இதுவரை, 100 தொழிலாளர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 785 தொழிலாளர்கள்; அவர்களின் குடும்பத்தினரை பரிசோதனைக்கு உட்படுத்தினோம். இன்னும், 80 பேரின் ரிசல்ட் மட்டும் வர வேண்டி உள்ளது என்றார்.