அவதூறு வழக்கில் காத்திருந்த ஆப்பு... சாட்டை துரைமுருகனுக்கு 15 நாட்கள் காவல்...!
இத்தோடு பல இடங்களில் உள்ள காவல்நிலையங்களிலும் சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகிறது.
பிரபல யூ-டியூபரும், நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணியைச் சேர்ந்தவருமான சாட்டை துரைமுருகன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி தவறாக பேசிவிட்டதாக, கூறிய கார் உதிரி பாக கடைக்காரரை அவரது கடைக்கே சென்று மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சாட்டை துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் ஆகிய நால்வரை திருச்சி கே.கே.நகர் போலீஸார் கைது செய்தனர்.
இத்தோடு பல இடங்களில் உள்ள காவல்நிலையங்களிலும் சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகிறது. தஞ்சை திருப்பணந்தாள் காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கும், கரூர் காவல் நிலையத்திலும் சாட்டை துரைமுருகன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கலைஞர் கருணாநிதியை அவதூறாக பேசியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் கார் உதிரிபாக கடைக்காரரை மிரட்டிய வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தஞ்சை மற்றும் கரூரில் பதியப்பட்டுள்ள வழக்குகளால் சாட்டை துரைமுருகன் ஜாமீனில் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் மணல் அல்லப்படுவதாக அவதூறாக பேசியதற்காக, சாட்டை துரைமுருகனுக்கு கரூர் நீதிமன்றம் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜாமீன் கிடைத்த போதும் பிற வழக்குகளுக்காக சாட்டை துரைமுருகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.