ஒருநாள் கூட நீடிக்காத பெருமை.. கரூருக்கு வந்த சோதனை
கொரோனாவிலிருந்து மீண்ட மாவட்டம் என்ற பெருமை கரூருக்கு ஒருநாள் கூட நீடிக்கவில்லை.
தமிழ்நாட்டில் இதுவரை 2323 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. சென்னையில் மட்டும் தான் தினமும் பாதிப்பு தாறுமாறாக எகிறி கொண்டிருக்கிறது.
சென்னையில் மட்டும் இதுவரை 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் உறுதியாகும் கொரோனா பாதிப்பில் சென்னையை தவிர பாதிப்பு உறுதியாக்கும் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. அதுவும் தினமும் 5-6 மாவட்டங்களில் மட்டுமே சராசரியாக பாதிப்பு உறுதியாகிறது.
மற்ற மாவட்டங்களில் எல்லாம் பாதிப்பு கூடுதலாக இல்லாத அதேவேளையில் அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். சென்னை தான் கொரோனா தடுப்பில் கடும் சவாலாக திகழ்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்குகூட கொரோனா உறுதியாகவில்லை. எனவே கொரோனா இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி தொடர்ந்து நீடிக்கிறது. ஈரோட்டில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 69 பேர் குணமடைந்து ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத மாவட்டமாக ஈரோடு உருவானது.
ஈரோட்டை தொடர்ந்து நீலகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்ததையடுத்து அந்த மாவட்டமும் கொரோனாவிலிருந்து மீண்ட மாவட்டமானது. இதையடுத்து கரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களும் கொரோனாவிலிருந்து மீண்ட மாவட்டங்களாகின.
கரூரில் 42 கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 41 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடைசி நபரும் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்ட மாவட்டம் என்ற பெருமையை கரூரும் பெற்றது. இந்நிலையில், அந்த சந்தோஷமும் பெருமையும் கரூருக்கு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. இன்று கரூரில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, அவர் கரூர் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.