கேலி கிண்டல் செய்தார்கள்.. எனக்கும் மாணவி தற்கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. ஆசிரியரின் பரபரப்பு கடிதம்.!
மாணவர்கள் என்னை தவறாக புரிந்து கொண்டு கேலியும் கிண்டலும் செய்கிறார்கள், நான் எந்த குற்றமும் செய்யாதவன். தனது அம்மா, அப்பா,மனைவி மற்றும் குழந்தைகள் மற்றும் உறவினர்களிடையே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள். மாணவர்கள் முன் அவமானமாக இருக்கிறது என தற்கொலை செய்து கொண்ட கணித ஆசிரியர் சரவணன் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது.
கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென தற்கொலை செய்து கொண்டார். அப்போது போலீசார் அவரது அறையை சோதனையிட்ட போது ஒரு கடிதம் சிக்கியது. அதில், கடிதத்தில் பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும். தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி கரூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக இந்த மாணவி தற்கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கரூர் மாணவி தற்கொலை செய்த அதே பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் சரவணன்(42) தனது மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று இரவு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டுக்கு தனியாக சென்ற சரவணன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கு ஆசிரியருக்கு தொடர்பு இருக்குமோ என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.
இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் சோதனையிட்ட போது ஒரு கடிதம் சிக்கியுள்ளது. அதில், மாணவர்கள் என்னை தவறாக புரிந்து கொண்டு கேலியும் கிண்டலும் செய்கிறார்கள், நான் எந்த குற்றமும் செய்யாதவன். தனது அம்மா, அப்பா ,மனைவி மற்றும் குழந்தைகள் மற்றும் உறவினர்களிடையே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.