கரூரில் ஒரே நாளில் 48 பேர் டிஸ்சார்ஜ்..! கைத்தட்டி, வாழ்த்தி வழியனுப்பிய மருத்துவ பணியாளர்கள்..!
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது வரை 101 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் முதலிடத்தில் கரூர் இருக்கிறது.
இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளில் தனிமை சிகிச்சையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆறுதல் தரும் செய்தியாக நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கரூர் அரசு மருத்துவமனையில் 48 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனினையே அங்கு கொரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு நேற்று மட்டும் 48 பேர் பூரண நலம் பெற்று உள்ளனர். அதன்படி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11, பேர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என நேற்று ஒரே நாளில் 48 பேர் கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீண்டுனர். இதையடுத்து அவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மருத்துவமனையில் நடைபெற்றது.
மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த மருத்துவமனை நிர்வாகமும் ஒன்றுசேர்ந்து குணமடைந்து வீடு திரும்பவர்களுக்கு பழங்கள் வழங்கி வாழ்த்தி, கைதட்டி உற்சாகப்படுத்தி அவர்களை வீடுகளுக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்தனர். வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மேலும் சில நாட்கள் சுய தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது வரை 101 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் முதலிடத்தில் கரூர் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 75 பேரும், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 53 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.