வரிசையில் நின்று வாக்களித்த பாஜக தலைவர் அண்ணாமலையின் தாயார்!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தாயார் பரமேஸ்வரி வரிசையில் நின்று வாக்களித்தார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை முதலே பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும்: வி.கே.சசிகலா!
அந்த வகையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தாயார் பரமேஸ்வரி வரிசையில் நின்று வாக்களித்தார். அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஊத்துப்பட்டியில் அவர் தனது வாக்கினை செலுத்தினார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது சொந்த ஊர் கரூர் மக்களவை தொகுதியில் வருகிறது, கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி, பாஜக சார்பாக செந்தில்நாதன், அதிமுக சார்பாக கே.ஆர்.எல்.தங்கவேல் ஆகியோர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். முன்னதாக, தனது சொந்த ஊரில் வாக்கினை செலுத்தி விட்டு அண்ணாமலை கோவை புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.