கரூர் மாவட்டத்தில் இருக்கும் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஒன்றியக்குழு வார்டுகள் இருக்கின்றன. இங்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். அமமுக வேட்பாளர்கள் 10 பேரில் 3 நபரை அதிமுகவினர் பணம் கொடுத்து வாபஸ் வாங்க சொன்னதாக கூறப்படுகிறது. வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான நேற்று அமமுக வேட்பாளர்கள் 3 பேரும் வாபஸ் வாங்க வந்துள்ளனர்.

அதில் திருமுருகன் என்பவரும் வந்திருந்தார். அமமுக வேட்பாளரான அவர் மனுவை வாபஸ் பெறுவதை அறிந்து அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமுருகனிடம் மனுவை வாபஸ் பெற வேண்டாம் என அவர்கள் எவ்வளவோ கூறியும் கேட்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமமுக கட்சியினர் திருமுருகனை கழிவறையில் வைத்து பூட்டியுள்ளனர். அதன் அருகே காவலுக்கு கட்சியினர் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.

குளித்தலை ஊராட்சியில் அ.ம.மு.க. வேட்பாளரை கழிப்பறையில் வைத்து பூட்டியதால் பரபரப்பு

திருமுருகன் கூச்சல் போட்டும் அவர்கள் கதவை திறக்கவில்லை. வேட்புமனுவை வாபஸ் பெறும் நேரம் முடிந்த பிறகே அவரை வெளியே விட்டுள்ளனர். அதன் பிறகு அவரை ஊராட்சி அலுவகத்திற்குள் அழைத்து வந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்து இட செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் குளித்தலை ஊராட்சி அலுவலகத்தில் நேற்று பரபரப்பு நிறைந்து காணப்பட்டது.