ஹலோ .. நான் கலெக்டர் பேசுறேன்... பணம் போட்டு விடுங்க - மோசடியில் ஈடுபட்ட கும்பல் !!
மாவட்ட ஆட்சியர் போல பேசி உணவக அதிபரிடம் பணம் பறிக்க முயன்ற கும்பலைச் சேர்ந்த பெண்ணை காவல் துறை கைது செய்துள்ளது .
கரூரில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்திற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது . அதில் பேசிய ஒருவர் , தான் கரூர் மாவட்ட ஆட்சியர் என கூறியுள்ளார் . கரூரில் ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்த அறுபதாயிரம் ரூபாயை தனது உதவியாளர் வங்கி கணக்கில் செலுத்துமாறு கேட்டுள்ளார் . இதனால் சந்தேகம் அடைந்த உணவக மேலாளர் அந்த எண்ணை சரி பார்த்துள்ளார் . அது ஆட்சியரின் எண் இல்லை என்று தெரிந்ததும் உடனடியாக காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார் .
இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் . அதில் கரூர் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்த ஜமாலுதீன் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் காக்காலூரை சேர்ந்த ரீட்டா பாபியோலா என்கிற பெண் ஆகிய இருவரும் தான் மேற்படி கரூர் மாவட்ட ஆட்சியர் போல பேசி உணவக மேலாளரிடம் தொலைபேசியில் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதன்படி குற்றவாளி ரீட்டா என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜமாலுதீன் தலைமறைவாக உள்ளதால் தனிப்படை போலீசார் இவரை தேடி வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .