கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மனைவி ப்ரீத்தி. இவர்களுக்கு கடந்த 2009 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஸ்ரீ விஷ்ணு(9) என்கிற மகன், சமஸ்க்ரிதி(4 ) என்கிற மகளும் உள்ளனர். குடும்பத்தில் கடுமையான வறுமை இருந்த காரணத்தால் கடந்த 2017 ம் ஆண்டு ரமேஷ் குமார் சமையல் வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். ப்ரீத்தி மட்டும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார்.

இதனிடையே இரண்டு வருடம் கழித்து ரமேஷ்குமார் நாடு திரும்பியிருக்கிறார். மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்திருக்கிறது. ஆனால் வீட்டின் உள்ளே குழந்தைகள் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வெளியே சென்று விட்டு இரவு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ப்ரீத்தியும் அங்கு இருந்துள்ளார். வீட்டை பூட்டிவிட்டு சென்றது சம்பந்தமாக மனைவியிடம் ரமேஷ்குமார் கேட்டிருக்கிறார். அதற்கு ப்ரீத்தி சரிவர பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக ப்ரீத்தி கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து தக்கலை காவல்துறையினரிடம் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு ரமேஷ்குமார் புகார் அளித்திருக்கிறார். ஆனால் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை என்று ப்ரீத்தி மறுத்திருக்கிறார். இந்த நிலையில் அகில் என்கிற வாலிபருடன் ப்ரீத்தி குடும்பம் நடத்தி வருவதாக ரமேஷ்குமாருக்கு தகவல் வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ்குமார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தன்னை திருமணம் செய்ததை மறைத்து வேறொருவரை மோசடியாக ப்ரீத்தி திருமணம் செய்து கொண்டதாகவும், திருமண புகைப்படங்களை தனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி ஆத்திரமூட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதையடுத்து ப்ரீத்தியை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு 15 வயதிலேயே திருமணம் செய்துவைத்து விட்டதால் அது செல்லாது என்றும் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று ப்ரீத்தி தெரிவித்திருக்கிறார். இதனால் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.