ஆவினின் தரத்தையும், சேவையையும் மேம்படுத்த முயற்சி - அமைச்சர் தகவல்
ஆவின் நிறுவனத்தை தரத்திலும், சேவையிலும் சிறந்த நிறுவனமாக மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாககோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துவது குறித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. அது ஒரு பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் லாப நோக்கில் இல்லாமல் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று பால் உற்பத்தி செய்கின்ற விவசாய பெருமக்களிடம் இருந்து நியாமான விலையில் பாலை பெற்று எந்த சீசனிலும் திட்டங்கள் வகுத்து அந்த பணிகள் செவ்வனே செய்யப்படுகிறது. சுமார் 9 ஆயிரத்து 673 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 4 இலட்சம் விவசாயிகளிடம் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 35 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து அவற்றை விநியோகம் செய்து வருகின்றோம்.
தற்போது 45 இலட்சம் லிட்டர் பால் கையாள்வதற்கான போதிய வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளது. இந்த வசதியினை இந்த ஆண்டுக்குள் 70 இலட்சம் லிட்டர் பாலாக உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனை பெற்று அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமுல் நிறுவனத்தினர் வியாபார நோக்கோடு வருவதால் ஆவினை பாதிப்பதாக கூறப்படுகிறது.
திருச்சியில் இருந்து குமரிக்கு காதலியை தேடி சென்ற பெண் விரட்டியடிப்பு
அந்தந்த மாநிலங்களில் இருக்கின்ற பால் உற்பத்தியாளர்களை பாதிக்காத வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இதில் விதி மீறல் ஏதும் வந்துவிடக்கூடாது என முதலமைச்சர், ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது ஆவினில் நிர்வாக ரீதியாக நேர்மையான பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. மேலும் 2 இலட்சம் கறவை மாடுகள் வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் விலங்குகளில் சுமார் 1 இலட்சம் மாடுகளுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாடுகளுக்கும் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐடி ரெய்டு; அதிகாரிகளின் கார்களை சூறையாடிய தொண்டர்கள்
மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். செயல்படாத பால் உற்பத்தியாளர் சங்கத்தினை கண்டறிந்து அதற்கான காரணங்களை ஆராய்ந்து மீண்டும் அதை செயல்பட வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் யாரும் அச்சப்படவோ, கவலை அடையவோ வேண்டாம். ஆவின் நிறுவனம் தரத்திலும், சேவையிலும் ஒரு சிறந்த நிறுவனமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.