'ஒரே இந்தியா.. வெற்றி இந்தியா'.. விவேகானந்தரை வைத்து செயல்படுத்தப்பட இருக்கும் அதிரடி திட்டம்!!
கன்னியாகுமரி கடலில் இருக்கும் விவேகானந்தர் மண்டபம் நேற்று பொன்விழா ஆண்டில் தடம் பதித்தது.
சுவாமி விவேகானந்தர், கடந்த 1892 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் தேதி கன்னியாகுமரி கடலில் 500 மீட்டர் நீந்திச் சென்று அங்கிருக்கும் ஒரு பாறையில் மூன்று நாட்கள் தவமிருந்தார். அது தான் பின்னாளில் அவரது நினைவாக விவேகானந்தர் பாறை என்று பெயரிடப்பட்டது.
கடந்த 1962 ம் ஆண்டு விவேகானந்தரின் 100 வது பிறந்தநாளில் அவர் தவமிருந்த பாறையில் நினைவு மண்டபம் எழுப்ப திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி 1964 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அந்த வேலை தொடங்கியது.
சுமார் 30 லட்சம் பேரிடம் 1 ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டது. 1.35 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த மண்டபம் 1970 ம் ஆண்டு செப்டம்பர் 2 தேதி அப்போதைய குடியரசு தலைவர் வி.வி கிரியால் திறந்து வைக்கப்பட்டது. கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தினுள் விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பின் பகுதியில் மண்டபத்தின் கீழே ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க விவேகானந்தர் மண்டபம் நேற்று தனது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்த நிகழ்வை 'ஒரே இந்தியா.. வெற்றி இந்தியா' என்ற கோஷத்தை முன்வைத்து நாடு முழுவதும் கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், விவேகானந்தர் மண்டபத்தின் பொன் விழா நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு ஒரு வருடத்திற்கு நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது.