நாகர்கோவிலில் ஒரே கடைக்கு இருவர் போட்டி, தர்ணா! - குழப்பத்தில் போலீசார்!
நாகர்கோவிலில் உடைத்த கடைமுன் உக்காந்திருக்கும் இடத்தின் உரிமையாளர். கடையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குடும்பத்துடன் சாலை மறுபுறம் காத்திருக்கும் குத்தகைத்தாரர் என ஒரே கடைக்கு இருவர் அவகாசம் கோருவதால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சந்திப்பு பகுதியில் நீண்ட காலமாக புரோட்டா கடை அதை தொடர்ந்து துணிக்கடை நடத்தி வருபவர் திமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சீ.தா. முருகன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். கட்டடத்தின் உரிமையாளர் ராபின்சன் என்பவர் சீதா முருகனை கடையை விட்டுச்செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து சீதா முருகன் அக்கடையை நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு இடத்தையும் கடையையும் ராபின்சன் வேறு நபர்களுக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடைக்கு வாடகை ஒப்பந்தமாக 35 லட்சம் ரூபாய் தான் கொடுத்துள்ளதாகவும், தனக்கு கடையை மீண்டும் தொடர்ந்து நடத்திட அனுமதி அளிக்காமல் தன்னை சிலர் மிரட்டுவதாகவும் காவல் நிலையத்தில் சீதா முருகன் புகார் ஒன்று அளித்துள்ளார்.
இதனிடையே, கடந்த 23 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் கட்டிடத்தில் உரிமையாளர் ராபின்சன் மற்றும் அவரது அடியாட்கள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு கடையை உடைத்து தள்ளி சென்றுள்ளனர். அப்போது சீதா முருகனையும் கட்டி வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார் இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் இரண்டாவது நாளாக இன்றும் ரவுடிகளுடன் வந்து கடை பூட்டு உடைத்து அட்டகாசம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. புகார் கொடுத்ததும் போலிஸ் வேடிக்கை பார்பதாகவும் தனி மனித பாதுகாப்பு திமுக ஆட்சியில் இல்லை என சீதா முருகன் கூறியுள்ளார். இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் ஆட்சியர் அலுவலகத்தில் சென்று குடும்பத்துடன் தீ குளிக்க போவதாக கூறியுள்ளார்.
அதே வேளையில் கட்டிட உரிமையாளர்களில் ஒருவரான ஜெயக்குமார் என்பவர் உடைந்த கடையின் முன் தனி ஆளாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவர் கூறும் போது, கடந்த பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் தான் திமுக பிரமுகர் என்பதை காரணம் காட்டி சீதா முருகன் கடையை கொடுக்காமல் இருந்து வருவதாகவும், மீண்டும் அவர் இந்த கடையை திறக்க விடமாட்டேன் எனவும் கூறி தர்ணாவில் ஈடுபட்டார். இருதரப்பினரும் ஒரே கடைக்காக காத்திருப்பதோடு, ஒருவருக்கு ஒருவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.