எங்கள பார்த்துத்தான் காப்பி அடிக்கிறாங்க... பாஜகவுக்கு இங்க வாய்ப்பில்ல ராஜா - விஜய் வசந்த் எம்.பி.,!
தமிழகத்தில் பாஜக அடியெடுத்து வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால், பாஜகவுக்கு இங்கு வாய்ப்பில்லை என விஜய் வசந்த் எம்.பி., தெரிவித்துள்ளார்
பாஜகவினரின் யாத்திரையால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. தமிழகத்தில் பாஜக அடியெடுத்து வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாம்; ஆனால் எண்ணம் எண்ணமாகவே இருக்கும். ஏனென்றால் இங்கு காங்கிரஸ் திமுக கூட்டணி வலுவாக உள்ளன. மக்களும் தெளிவாக உள்ளதால் பாஜகவுக்கு இங்கு வாய்ப்பு இல்லை என விஜய் வசந்த் எம்.பி., தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்தும், வன்முறைகளை தடுக்க தவறிய மத்திய, மாநில பாஜக அரசுகளை ராஜினாமா செய்ய கோரியும் கன்னியாகுமரி கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் , தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த கன்னியாகுமரி எம்.பி., விஜய் வசந்த், பாரத் ஜோடோ யாத்திரையை பார்த்துதான் பாஜகவினர் தற்போது யாத்திரை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், பாஜகவினரின் யாத்திரை அரசியல் நோக்கத்தோடு வரும் பாராளுமன்ற தேர்தலை குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இதனால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் பாஜக அடியெடுத்து வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் அந்த எண்ணம் எண்ணமாகவே இருக்கும். ஏனென்றால் இங்கு காங்கிரஸ் திமுக கூட்டணி வலுவாக உள்ளன. மக்களும் தெளிவாக உள்ளதால் பாஜகவுக்கு இங்கு வாய்ப்பு இல்லை.” என தெரிவித்தார்.
முன்னதாக, காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மற்றும் குழந்தைகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மார்த்தாண்டம் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குமரி மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் ஷாஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். மாவட்ட அளவில் கலை இலக்கிய போட்டிகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்த கல்லூரி மற்றும் பள்ளிக்கு கோப்பை மற்றும் பரிசுகளையும் அவர் வழங்கினார்.