விஸ்வகர்மா திட்டம் குறிப்பிட்ட மாணவர்களுக்கு மேல் படிப்பை தடுக்கும் ஒரு சதித் திட்டம்! - முத்தரசன் கண்டனம்!
பிரதமர் மோடி அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டம் 18 குல தொழில்களை தேர்வு செய்து, அந்த குல மாணவர்களை மேல் படிப்பு படிக்க விடாமல் தடுக்கும் சதி செயல் திட்டம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பிரதமர் மோடி விஸ்வகர்மா திட்டம் என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ளார் இதன்படி மண்பாண்டம் செய்பவர்கள் நகை தொழில், மர தொழில், செய்பவர்கள் போன்ற 18 வகையான தொழில்களை தேர்வு செய்து, அந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் சமூகத்தில் உள்ள 18 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு தொழில் செய்ய கடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
குலக்கல்வி முறையை போன்று இளைஞர்களை உயர்கல்வி படிக்க விடாமல் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சதி செயல் திட்டம். சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி பேசியதில் என்ன தவறுஇருக்கிறது? இதற்கு பிரதமர் முதல் பாஜகவில் உள்ள அத்தனை நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்து பேசி வருகின்றனர்.
நரேந்திர மோடி 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன். வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் ரூபாய் தருவேன் என கூறி ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாகிறது. இதுவரை அதை செய்யவில்லை. எனவே ரூ15 லட்சம் வேண்டாம். 15 ஆயிரத்தை ஆவது வழங்க வேண்டும். தமிழக முதல்வர் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிய திட்டம், குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் போன்றவை அற்புதமான திட்டங்கள்.
புதுவை மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அந்த பதவியில் இருந்து கொண்டு அரசியல் பேசக்கூடாது. ஆனால் அவர் பெண்களுக்கு ஆயிரம் ரூபாயை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் அவர் மத்திய அரசு 15 லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறியதில் 15 ஆயிரம் ரூபாயை நிலுவை தொகையுடன் வழங்க செய்தால் நல்லது. கர்நாடகா மாநிலத்தின் வடிகாலாக தமிழகத்தை பயன்படுத்துவது சரியல்ல. காவிரியை நம்பி 12 லட்சம் ஏக்கர் குறுவைப் பயிர்கள் உள்ளது. எனவே மத்திய அரசு இதனை பொது பிரச்சினையாக எடுத்து உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.