குமரி கொரோனா வார்டில் அடுத்தடுத்து அதிர்ச்சி பலி..! சுகாதாரத்துறை அதிரடி விளக்கம்..!
கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேரின் தொண்டை மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதன் முடிவில் உயிரிழந்த மூன்று பேருக்கும் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் இருக்கும் கொரோனா வார்டில் முட்டம் பகுதியைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தையும், திருவட்டாரைச் சேர்ந்த இளைஞரும் சிகிச்சையில் இருந்தனர். நேற்று முற்பகலில் இருவரும் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக நேற்று காலையில் ராஜக்கமங்கலம் சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து ஒரே நாளில் கொரோனா வார்டில் இருந்த மூன்று பேர் பலியான செய்தி வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே கொரோனா வார்டில் இருந்த 2 பேர் உயிரிழந்திருந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.
நேற்று உயிரிழந்த மூவருக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்கிற அச்சத்தில் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மூவரும் உயிரிழந்ததை அடுத்து அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வுகளின் முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக சுதாரத்துறை அமைச்சகம், கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேரின் தொண்டை மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதன் முடிவில் உயிரிழந்த மூன்று பேருக்கும் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.