சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்திற்கு நிவாரணம்... எடப்பாடி அறிவித்த ரூ 1 கோடி..!
சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி ரூபாயை நிவாரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில், புதன்கிழமை இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டாா். சோதனைச் சாவடி அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து சுட்டுக் கொன்ற நபா்களை போலீஸாா் அடையாளம் கண்டறிந்துள்ளனா்.
இந்த கொலை வழக்கில் தொடா்புடையவா்களாகக் கருதப்படும் குமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம், கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் ஆகிய 2 பேரின் புகைப்படங்களை கேரள மாநில போலீஸாா் வெளியிட்டுள்ளனா். கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக டி.ஜி.பி. திரிபாதி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.
இந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது. அண்மையில் பெங்களூருவில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், வில்சன் உடலில் இருந்த துப்பாக்கிக் குண்டுகள் அந்த பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் பொருந்திப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இந்த கொலை வழக்கு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த சையது முகமது மற்றும் அப்பாஸ் ஆகியோரை பிடித்து கேரள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதுபோன்று திருவனந்தபுரத்தில் ரஃபீக் என்பவரிடம் தமிழக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் மறைந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசுப்பணி வழங்கப்படும் என அறிவித்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போலவே எஸ்.எஸ்.ஐ வில்சனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடியை நிவாரணமாக அறிவித்துள்ளார்.