‘அய்யா வைகுண்டசாமி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்’... கன்னியாகுமரியில் மக்களுக்கு ஸ்டாலின் வாக்குறுதி...!
இன்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் நடைபெற உள்ளது. இந்த முறை அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் என ஐந்துமுனை போட்டி நிலவுவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இன்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
பொதுமக்களிடையே உரையாற்றிய ஸ்டாலின்: இப்ப 10 வருஷமா ஒரு ஆட்சி இருக்கு நான்கு ஆண்டுகளாக பழனிச்சாமி ஆட்சி செய்து வருகிறார் பல்லி பாம்பு போன்ற ஊர்ந்து வந்தவர் அவர் படிப்படியாக வளர்ந்து வந்தது நான் பார்க்கவில்லை. நான்தான் 14 வயதிலேயே சாதாரணமாக உறுப்பினராக திமுகவில் இணைந்து கொண்டு கோபாலபுரத்தில் வட்ட பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை மாநகர உறுப்பினராக கலைஞர் மறைவிற்கு பிறகு தலைவராக வந்திருக்கிறேன். மேலும் முதல்வரின் நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடத்திருப்பதாகவும், அதை சம்பந்தமாக திமுக போட்ட வழக்கை எதிர்கொண்டிருந்தால் தற்போது அவர் சிறையில் இருந்திருப்பார் என்றும் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டசாமி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். காட்டுப்பள்ளி துறைமுகம் அனுமதிக்கப்படமாட்டாது என்பதைபோல் கன்னியாகுமரி சரக்கு பெட்டக மாற்று துறைமுகத்தையும் அனுமதிக்க மாட்டோம், கன்னியாகுமரி துறைமுகம் வருவதால் விவசாயிகளும் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் அவர்களின் வாழ்வாதாரம் அழியும் என்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் இத்திட்டத்தை வரவிடாது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், கன்னியாகுமரி அரசுக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் மையம் அமைக்கப்படும், விளவங்கோடு, நெய்யாறு, இடதுகரை கால்வாய் தூர்வாரப்படும், கல்குளம் வட்டம் - வாணியக்குடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், குலசேகரம் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இவை அனைத்தையும் தேர்தல் அறிக்கை சொல்லியிருக்கிறோம்.கொடுத்த வாக்குகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
கொரோனா பாதிப்பினால் அகால மரணமடைந்து நம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திப் பிரிந்துவிட்டார் வசந்தகுமார். அவருடைய இடத்தை பூர்த்தி செய்வதற்காக அவரது மகன் விஜயகுமார் உங்களிடத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். எனவே வசந்தகுமார் அவர்களை நினைத்து அவருடைய அருமை மகன் விஜயகுமாருக்கு நீங்கள் கை சின்னத்தில் ஆதரவு தரவேண்டும் என்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.