நாகர்கோவிலில் 370 கிலோ எடை கொண்ட காரை 25 மீட்டர் தூரம் தூக்கிச் சென்றவர் இளைஞர்களுக்கு அழைப்பு!!

நாகர்கோவிலில்  370 கிலோ எடை கொண்ட காரை 25 மீட்டர் தூரத்திற்கு தூக்கிக் கொண்டு நடந்து சென்று உலக சாதனையில் படைத்துள்ளார் முதுநிலை பட்டதாரி ஒருவர். 

Man lift 370 kg car and walked 25 metres in nagarcoil

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே  தாமரைகுட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன். இவர் எம்.ஏ. முதுநிலை பட்டதாரி. மேலகிருஷ்ணன்புதூரில் விளையாட்டு பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே ஒன்பதரை டன் எடையுள்ள லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்தவர். மேலும், பதிமூன்றரை டன் எடையுள்ள லாரியில் கயிறு கட்டி 4 நிமிடத்தில் 111 மீட்டர் தூரம் இழுத்து சென்று, அவரது முந்தைய சாதனையை அவரே முறியடித்து உலக சாதனை படைத்தார். 

இத்துடன், சுமார் 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிள்களை தனது தோளில் சுமந்தபடி 42 கிலோமீட்டர் நடந்து சென்றார். மேலும், ஜம்போ சர்க்கஸில் 5 கிலோ இரும்பு உருளையை ஒற்றை கையால் தூக்கி பார்வையாளர்களையும் சர்க்கஸ் சாகச வீரர்களையும் வியக்க வைத்தார். இவ்வாறு பல்வேறு சாதனைகளை படைத்து வந்தவர், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கி 25 மீட்டர்  நடந்து சென்று உலக சாதனை படைத்துள்ளார். 

வெளிநாட்டில் மட்டுமே இந்த உலக சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக 370 கிலோ எடை கொண்ட காரை கண்ணன் அசாதாரணமாக 25 மீட்டர்  தூக்கி நடந்து சென்று சாதனை படைத்துள்ளார். கண்ணனின் இந்த சாதனை நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவருக்கு உற்சாகத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 

தனது சாதனை குறித்து கண்ணன் அளித்த பேட்டியில், ''நீண்ட கால லட்சியமாக இருந்து வந்த இந்த நிகழ்வை இன்று சாதித்துள்ளேன். விரைவில் பல சாதனைகள் நிகழ்த்த உள்ளேன். தற்போதைய சாதனைக்காக சிறப்பு உணவு என வேறு எதையும் சாப்பிடவில்லை. உள்ளூரில் கிடைக்கும் கருப்பு கட்டி உளுந்து போன்ற உணவு வகைகளையே சாப்பிட்டேன். அமைச்சர் மனோ தங்கராஜ் என்னை தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரை சந்திக்க அழைத்துச் செல்வதாக கூறியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது தொடர் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அரசு வேலை எனக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் பல சாதனைகளை என்னால் படைக்க முடியும். இன்றைய இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி விடாமல் எந்த துறைகளில் செயல்பட்டாலும் இது போன்ற சாதனை முயற்சிகளுக்கு களமிறங்க வேண்டும்'' என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios