கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருக்கும் தாணுமாலயன் கோவில் புகழ் பெற்றது. இங்கு தாணு, மால், ஐயன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே காட்சி தருவது சிறப்புக்குரியதாக பக்தர்களால் கருதப்படுகிறது. மேலும் இந்திரனுக்கு சாப விமோச்சனம் அளித்த தலமாகவும் இக்கோவில் புராணங்களில் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏரளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

இங்கு மார்கழி மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதுமுதல் தினமும் சுவாமிக்கு விதவிதமான அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 7.45 மணிக்கு மேல் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து 10ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு ஜனவரி 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பிப்ரவரி 8ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.