மலையோர பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை! நீரில் மூழ்கிய தரைப்பாலம்! போக்குவரத்து துண்டிப்பு!பொதுமக்கள் அவதி
கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் பல்வேறு மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.
மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காட்டாற்று வெள்ளத்தால் கோதையார் அருகே குற்றியார் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் பல்வேறு மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராங்களுக்கு செல்ல கோதையார் அருகே உள்ள குற்றியார் தரைப்பாலம் வழியாக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் நடந்தும் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் ஊரை விட்டு நகரங்களுக்கு செல்ல முடியும்.
அடிக்கடி மழை பெய்யும் போது காட்டாற்று வெள்ளதாலும், கோதையார் நேர் மின் நிலையத்தில் இருந்து நீர் வெளியேற்றும் நேரத்திலும் இந்த தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் கிராமங்களுக்கு உள்ளேயே முடங்கி விடுகின்றனர். அதேபோல், வெளியே சென்ற மக்கள் ஊருக்கும் செல்ல முடியாமல் தவிப்பது வழக்கம்.
இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க மலை வாழ் மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தும் தமிழக அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கன மழையில் காட்டாற்று வெள்ளத்தால் குற்றியார் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அரசு பேருந்து சேவையும் நிறுத்தி உள்ளதால் மோதிரமலை, மாங்கா மலை, விளாமலை, குற்றியார், கல்லார், தச்சமலை உட்பட பல்வேறு மலையோர கிராமங்கில் உள்ள மலைவாழ் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.