இந்த 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..!
தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், லட்சத்தீவு மாலத்தீவு கேரள கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தேவாலாவில் 13 செ.மீ. வேடசந்தூர், குளச்சல் பகுதியில் 8 செ.மீ., மழையும், இளையான்குடியில் 5 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.