குமரி கொரோனா வார்டில் 3வது பலி..! காய்ச்சலால் சிகிச்சையில் இருந்தவர் மரணம்..!
உயிரிழந்த முதியவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளின் முடிவிலேயே அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா என்பது தெரியவரும்.
உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 19 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இதுவரையில் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். இதனிடையே கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் தற்போது மரணமடைந்துள்ளார். ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த 66 வயது முதியவர் கேரளாவில் மீன் பிடி தொழில் பார்த்து வந்தார். காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்படவே தனிமை சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளின் முடிவிலேயே அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா என்பது தெரியவரும். இரண்டு நாட்களுக்கு முன்பாக இதே மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்த முதியவர் மற்றும் பெண் ஒருவர் பலியாகி இருந்தனர். மொத்தம் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த 3 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.