குடியரசு தினத்தில் கொடிகட்டி பறந்த சரக்கு விற்பனை..! 18 பேர் அதிரடி கைது..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மது விற்றதாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் 71வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. டெல்லியில் குடியரசு தலைவர் தேசிய கொடி ஏற்றினார். அதே போல அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் கொடி ஏற்றினர். குடியரசு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும் என்றும் அன்று மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மதுபானம் விற்றதாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் மறவன்குடியிருப்பை சேர்ந்த ராஜு (வயது 44), மகேஸ்வரன் (38) ஆகிய இருவர் மறைத்து வைத்து மது விற்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. அதன்படி அவர்களை கைது செய்த காவலர்கள் 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போல திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பரிடம் இருந்து 45 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைதாகி இருக்கிறார்.
மேலும் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார் அனுமதி இன்றி மது விற்றதாக 18 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 200 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.