கடுமையான விரதம் இருந்து கழுமரம் ஏறிய இளைஞர் மூச்சுத்திணறி பலி; கோவில் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்
சாணார்பட்டி கோவில் திருவிழாவில் விரதம் இருந்து கழுமரம் ஏறிய பக்தர் ஒருவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள கம்பிளியம்பட்டியில் முத்தாலம்மன், பகவதியம்மன், காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மே 29-ஆம் தேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா, பக்தர்கள் முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு, தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், பாரி வேட்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Temple Festial: திண்டுக்கல்லில் அம்மனுக்கே ஆதார் கார்டு அடித்த பக்தர்கள்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கழுமரம் ஏறுதல் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு 50 அடி உயரம் உள்ள மரம் ஒன்றின் பட்டைகள் உரிக்கப்பட்டு அதன் மீது கேள்வரகு மாவு, விளக்கெண்ணை, சோற்று கற்றாழை ஆகியவை தடவி ஊன்றப்பட்டது. கழுமரத்தில் விரதம் இருந்த பக்தர்கள் போட்டி போட்டு ஏற முயன்றனர். அப்போது கணவாய்பட்டியை சேர்ந்த பிச்சை மகன் சுப்பிரமணி (வயது 30) என்பவரும் கழுமரத்தில் ஏற முயன்றார். அவரை இளைஞர்கள் உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அவசர ஊர்தியில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சனிக்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு ஏற்கனவே இதுபோல் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படும் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
அழகர்கோவில் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மீன்களை அள்ளிச் சென்றனர்
கூலி வேலை பார்த்துவந்த சுப்பிரமணிக்கு திருமணமாகி அங்காள ஈஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருவிழாவில் கலந்து கொண்ட இளைஞர் திடீரென மூச்சுத்திணறலால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.