பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 3.47 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோவில். இக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக பக்கத்துக்கு மாநிலமான கேரளாவில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில், பழனியில் தைப்பூசத் திருவிழா ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் கடந்த 11ம் தேதி மாலை தேரோட்டத்துடன் நிறைவு பெற்றது. தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்து மலை அடிவாரத்தில் மயில் காவடி, பன்னீர் காவடி, பால் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.

இதையும் படிங்க: பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய செய்தி! இன்று! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

இந்நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் தைப்பூச திருவிழாவில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் உண்டியல் நிரம்பியது. உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து பிரித்து இரண்டு நாட்களாக எண்ணப்பட்டது. மொத்தம் காணிக்கை ரூபாய் 3 கோடியே 47 இலட்சத்து 5 ஆயிரத்து 568 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதன் மூலம், தங்கம் 379 கிராமும், வெள்ளி 44 ஆயிரத்து 67 கிராமும் கிடைத்தது. 

மேலும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1,631ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஐநூறுக்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.