Palani Murugan Temple: தமிழ் கடவுளுக்காக பழனியில் ஒன்று சேரும் 3 மாநில முதல்வர்கள் - அமைச்சர் அதிரடி ஆய்வு
பழனியில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள உலக முருக பக்தர்கள் மாநாட்டில் மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ள நிலையில், தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
பழனியில் உலகத் தமிழர் முத்தமிழ் முருகர் மாநாடு ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக உலகம் முழுவதும் இருந்து வரும் முருக பக்தர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அருள்மிகு பழனியாண்டவர் கலை அறிவியல் கல்லூரியில் இந்த பணிகளை ஆய்வு செய்ய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று வருகை தந்தார். காலையில் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்குச் சென்ற அவர், கால பூஜையின் போது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து கோவிலில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளையும், பிற பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பழனி ஆண்டவர் கல்லூரியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவருடன் தமிழக இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதரன், செயலர் மணிவாசகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.