தங்கும் விடுதியில் பெண் சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை - காங்கிரஸ் மாவட்ட தலைவர் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் அப்துல்கனிராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் அப்துல்கனிராஜா(வயது 50). இவர் கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர். இப்பகுதியில் இவருக்கு சொந்தமாக தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இவர் கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ரிசார்ட்ஸ் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். முக்கியமானவர்களுக்கு கொடைக்கானல் பகுதிகளில் இடம் வாங்கி கொடுப்பது, விற்பது போன்ற தொழிலையும் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தென் சென்னையில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ராஜசேகர் என்பவர் குடும்பத்துடன் கொடைக்கானல் வந்துள்ளார். இவர் நாயுடுபுரம் பகுதியிலுள்ள அப்துல்கனிராஜாவிற்கு சொந்தமான தங்கும் விடுதியில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராஜசேகர் மற்றும் ஒரு சிலர் திங்கள்கிழமை கொடைக்கானலிலுள்ள சுற்றுலா இடங்களை பார்ப்பதற்காக சென்றனர். இவர்கள் தங்கியிருந்த அறையில் ராஜசேகரின் உறவினரான சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மட்டும் இருந்துள்ளார். அப்போது அப்துல்கனிராஜா தனியாக தங்கியிருந்த பெண்ணிடம் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
குடும்ப வறுமையால் வேலைக்கு சென்ற மாணவன்; சாலையின் குறுக்கே வந்த மாடால் நேர்ந்த சோகம்
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அப்துல்கனிராஜா தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை அப்துல்கனிராஜாவிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரனை நடத்தினார். அப்போது அப்துல்கனிராஜா தனக்கு நெஞ்சுவலி ஏற்படுவதாக கூறி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து அப்துல்கனிராஜாவை நீதிமன்றத்திற்கு காவல் துறையினர் அழைத்து செல்ல முயன்ற போது அவரது உறவினர்கள் சிலர் தடுக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த ஏ.டி.எஸ்.பி.சந்திரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்புடன் அப்துல்கனிராஜா கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
திராவிட மாடல் ஆட்சி சிலருக்கு வயிற்று எரிச்சலை -ஏற்படுத்தி உள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜி
வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக் அப்துல்கனிராஜாவை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் சிறைச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.