வண்டிய எடுக்க முடியுமா? முடியாதா? திடீரென மோதிக்கொண்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்களால் கலேபரமான பேருந்து நிலையம்
நத்தம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தால் பேருந்து நிலையம் சற்று பரபரப்பாகக் காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, காரைக்குடி, கோயம்புத்தூர், திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு வழிதடங்களுக்கு பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்லும் பேருந்து வழக்கம் போல் நத்தம் பேருந்து நிலையத்திற்கு வந்தது.
அப்போது நத்தத்தில் இருந்து திருப்பூருக்கு செல்ல வேண்டிய பேருந்து அங்கிருந்து புறப்படாமல் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் புதுக்கோட்டையில் இருந்த வந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் - திருப்பூர் செல்ல புறப்பட்ட அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பாஜகவின் வெற்றிக்கு அணில் போல உதவியாக இருப்போம்; கூட்டணியை உறுதி செய்தார் டிடிவி தினகரன்
வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது அங்கு வந்த சக போக்குவரத்து பணியாளர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். மோதலைத் தொடர்ந்து இரு பேருந்து ஓட்டுநர்களும் பேருந்தை பேருந்து நிலையத்திலேயே நிறுத்திவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். இதனால் செய்வதறியாது தவித்த பயணிகள் வேறு வழியின்றி மாற்று பேருந்தில் ஏறிச் சென்றனர். இச்சம்பவத்தால் நத்தம் பேருந்து நிலையத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.