Breaking: பாஜகவின் வெற்றிக்கு அணில் போல உதவியாக இருப்போம்; கூட்டணியை உறுதி செய்தார் டிடிவி தினகரன்
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில் தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் தொடர்பான பணிகளை விரைவு படுத்தி உள்ளன. இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று என்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். அப்போது பாஜக, அமமுக இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பது உறுதி. தமிழகத்தில் பாஜகவின் வெற்றிக்கு அமமுக அணில் போல உதவி செய்யும். எங்களது நிபந்தனைகள் என்ன, கோரிக்கைகள் என்ன என்பது பாஜகவினருக்கு தெரியும், எந்தெந்த தொகுதி, எத்தனை தொகுதி என்பது எங்களுக்குள் பிரச்சினை கிடையாது.
தாமரை சின்னத்தில் அமமுக போட்டியிட வேண்டும் என்று பாஜக எங்களை நிர்பந்திக்கவில்லை. அது முற்றிலும் பொய்யான தகவல். நாங்கள் ஒரு தனி கட்சி. எங்களுக்கென ஒரு சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களை மாற்று கட்சியினரின் சின்னத்தில் நிற்க வேண்டும் என எந்த கட்சியும் நிர்பந்திக்க முடியாது. பாஜக அப்படி எங்களை நிர்பந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். அதே போல பாஜகவுக்கும் ஒரு கொள்கை உள்ளது. தற்போதைய சூழலில் நாட்டின் வளர்ச்சிக்கு பாஜகவின் வெற்றி தேவையான ஒன்று என்ற அடிப்படையில் அவர்களுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளோம். ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழல் நெருங்கி வந்தது. ஆனால் அது நிறைவேறாமல் சென்றுவிட்டது. ஆனால் தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அது நிறைவேறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.