Bio block | ஏரியை நன்னீர் ஏரியாக மாற்றும் ''பயோ பிளாக்'' திட்டம்! முதன்முறையாக கொடைக்கானலில் துவக்கம்!
Bio block project | கொடைக்கானல் நட்சத்திர ஏரியை நன்னீர் ஏரியாக மாற்ற பயோ பிளாக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொடைக்கானலில் துவக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நட்சத்திர ஏரியை 1863-ம் ஆண்டில் சர் ஹென்றி லெவின்ச் என்பவர் கட்டமைத்தார். அப்போது, இந்த ஏரி குடிநீர் பயன் பாட்டுடன் நன்னீர் ஏரியாக இருந்தது. இதனை தொடர்ந்து நட்சத்திர ஏரியினை சுற்றி நீர் தாவரங்கள், கரையோரங்களில் படர்ந்துள்ள புதர் கள் என ஏரியின் அழகு பாதிக்கப்படும் சூழலே தொடர்கின்றது.
இந்த சூழலில் கொடைக்கானல் நகராட்சி நட்சத்திர ஏரியை மேம்படுத்தும் வகையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் செயற்கை நீரூற்றுகள், புதிய படகு குழாம் உள்ளிட்ட நவீன வசதிகளை கட்டமைத்து வருவதுடன் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் பயோ பிளாக் (Bio block) எனும் ஜப்பான் தொழில் நுட்பத்தை புகுத்தி நட்சத்திர ஏரியை நன்னீர் ஏரியாக மாற்றும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் தற்காலிக தண்ணீர் தொட்டி அமைத்து, ஏரியில் இருந்து நீரை எடுத்து தண்ணீர் தொட்டியில் சேமித்து அதில் பயோ பிளாக் எனும் பவளப்பாறைகளை (Bio block) தண்ணீர் தொட்டியில் இட்டு கடந்த சில வாரங்களாக ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில் இதில் மாசடைந்த நீரானது தெள்ளத்தெளிவாக மாறி வருவதும் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஏரியை சுற்றி 41 இடங்களில் மிதவை முறையில் பயோ பிளாக் பவள கற்கள் மிதக்க விடப்பட உள்ளன. இதன் திட்ட மதிப்பு ரூ.3 கோடி எனவும் நகராட்சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் ஏரியில் உள்ள 7 லட்சம் கியூபிக் லிட்டர் நீர் தூய்மைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பயோபிளாக் (Bio block)கற்கள் அமைப்பதன் மூலம் ஏரி நீர் தூய்மையடைந்து நீர் தாவரங்களும் இயற்கை முறையில் அகற்றப்படும், இதனை தொடர்ந்து ஆரம்ப கால கட்டத்தில் இருந்தது போன்று நட்சத்திர ஏரி நன்னீர் ஏரியாகவும் காட்சியளிக்கும். இந்த தொழில்நுட்பம் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவிலேயே கொடைக்கானல் ஏரியில் தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் வனத்துறையினரின் வாகனத்தை பந்தாடி உயிர் பயத்தை காட்டிய ஒற்றை காட்டு யானை