கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே இருக்கிறது இருப்புக்குறிச்சி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சாமுவேல். இவரது மகன் மரிய வின்சென்ட்(வயது 20). சேப்ளாநத்தத்தில் இருக்கும் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். அவரது மகன் அந்தோணிராஜ் (24). மரிய வின்சென்டும் அந்தோணிராஜும் நண்பர்கள் ஆவர்.

நேற்று இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் இருப்புக்குறிச்சியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். புதுக்கூரைப்பேட்டை அருகே வந்த போது அதே சாலையில் மோட்டார் சைக்கிள் பின்னால் கார் ஒன்று வந்துள்ளது. அதிவேகத்தில் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

இந்தியாவில் கொரோனாவிற்கு அடுத்த பலி..! மஹாராஷ்டிராவில் ஒருவர் உயிரிழந்தார்..!

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த இருவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.