கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் அன்புச்செல்வன். நேற்று அவரது சொந்த வேலைகள் காரணமாக கும்பகோணம் சென்றிருந்தார். அங்கு பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சேத்தியாத்தோப்பு வழியாக தனது காரில் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை ஆட்சியரின் ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். சோழதரம் அருகே இருக்கும் மாமங்கலம் என்கிற கிராமத்தின் அருகே ஆட்சியரின் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் முதியவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்சியரின் கார் முதியவரின் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உடனடியாக முதியவரை தனது வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக அருகே இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதைக்கேட்டு ஆட்சியரும் அவருடன் வந்தவர்களும் மேலும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். 

அதில் இறந்து போனவர் மாமங்கலத்தை சேர்ந்த ராமசாமி என்கிற விவசாயி என தெரியவந்தது. வங்கிப்பணிகள் சம்பந்தமாக சோழதரம் சென்று விட்டு வரும்போது ஆட்சியரின் வாகனம் மோதி பலியாகி இருக்கிறார். இதையடுத்து உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு ராமசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்... நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..!