கோவை அருகே இருசக்கர வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தர்மபுரியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு கார்த்திக்(10) என்கிற மகனும் காயத்ரி(9), கீர்த்தனா(7) என்று இருமகள்களும் இருந்துள்ளனர். கட்டிட தொழிலாளியான வெங்கடேஷின் இரண்டு மகள்களும் சங்கனூரில் இருக்கும் அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர். தினமும் இவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வெங்கடேஷ் பள்ளியில் விடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்று காலையில் மகன் மற்றும் மகள்களை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வெங்கடேஷ் சென்றுள்ளார். தயிர் இட்டேரி பகுதியில் வந்த போது அங்கிருந்த குப்பைத்தொட்டியில் மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியது. அதில் லாரியின் முன் பக்க டயரில் சிக்கி சிறுமி கீர்த்தனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் பலத்த காயத்துடன் உயிர்க்கு போராடிக்கொண்டிருந்தனர். 

அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விரைந்து வந்த காவலர்கள் உயிரிழந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுமி காயத்திரியும் உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.