கோவை அருகே மனைவி தற்கொலை செய்து கொண்டதால் கணவனும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

கோவை மாவட்டம் இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சாரதா. இவர்கள் இருவரும் கம்பங்கூழ் விற்கும் தொழில் பார்த்து வருகின்றனர். அந்த பகுதியில் கணவன், மனைவி இருவரும் தனித்து வசித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்னர் சண்டை நடந்திருக்கிறது. இதனால் கணவரோடு பேசாமல் இருந்த சாரதா, இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவரை பல இடங்களில் தேடி பார்த்திருக்கிறார் கிருஷ்ணன். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அந்த பகுதியில் இருக்கும் ஒரு பாழடைந்த கிணற்றில் பெண் பிணம் ஒன்று மிதப்பதாக கிருஷ்ணனுக்கு தகவல் வந்திருக்கிறது. தனது மனைவியாக இருக்குமோ என்ற சந்தேகத்தோடு கிருஷ்ணன் அங்கு சென்றிருக்கிறார்.

அங்கு கிணற்றில் சாரதா பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுதிருக்கிறார். பின்னர் அவரும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டதை அந்த பகுதி மக்கள் காவல்துறையிடம் கூறியிருக்கிறார்கள்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயதான காலத்தில் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.